Accharam Tamil Cinema Latest News

Reach latest Tamil Cinema Articles, News & Updates brought to you by Accharam !
யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா

கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.

IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்

ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், “வைரமுத்து என் தாய்” என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வை குறித்து பேசும்போது பொத்துவில் அஸ்மின் தெரிவித்தாவது.

“கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவு.

ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியம் — நான் பெற்ற வரம் என்பேன்.

எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.

நான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தது — இது என் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம். இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்கள் கூட இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிவேன்.”

விழாவை ஏற்பாடு செய்து இந்த அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்ந நன்றிகள்” என அவர் தெரிவித்தார்.

No comments yet
Search